தையல்கலை ஓர் அறிமுகம்.

அழகுக்கு அழகூட்டும் கலை:


          கலைகளுள் சிறந்த ஒரு கலை தையற்கலை, நல்ல உடையை, விதவிதமான உடைகளை உருவாக்கும் கலையே தையல் கலை. காலப்போக்கில் சில கலைகள் அழியும் தன்மையை பெறுவது இயற்கை, ஆனால் இந்தத் தையற்கலைக்கு என்றென்றும் அழிவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

காலத்தால் அழியாத கலை:

          உணவு, உடை, இருப்பிடம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை. ஆகையால் உடை என்ற ஒன்று இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும். எனவே, தையல் கலை என்ற ஒரு கலை இந்த பூமி சுழன்று கொண்டு இருக்கும் வரை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

அடிப்படை உடை....ஆடம்பர உடை:

           அடிப்படைத் தேவையான உடை என்பதைத் தாண்டி, மனிதன் ஆசைவயப்பட்டு, விதவிதமான ஆடையை பேஷனாக உடுத்த ஆரம்பித்தது முதல், விதவிதமான தையல்களின் தேவை அதிகரித்தது. இது எதிர்காலத்தில் மேலும் மக்களின் மனநிலையைப் பொறுத்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆகவே இந்த தையல் கலையில் பணம் ஈட்ட சிறியது முதல் பெரிய வாய்ப்புகள் வரை கொட்டிக் கிடக்கிறது. வளரிளம் பருவப் பெண்ணே, தையற் கலையில் மனம் இருந்தால், வளமான வாழ்க்கைக்கு மார்க்கம் உண்டு.


ஆள் பாதி, ஆடை பாதி:

          இயற்கையில் ஒருவர் அழகில்லாதவர் என்றாலும், செயற்கையில் ஒருவரை அழகுறச் செய்வது இந்தத் தையற்கலையே.


          ஒரு மனிதனின் தன்மையை அவர் அணிந்து இருக்கும் உடையைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒரு மனிதனின் குணத்தையும் மற்றும் ஆரோக்கியத்தையும் அவர் அணிந்து இருக்கும் உடையின் நிறைத்தைக் கொண்டு, உடையின் விதத்தைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். இதைத்தான் நம் முன்னோர்கள் "ஆள்பாதி ஆடைபாதி" என்பார்கள்.


முதல் மரியாதை:

          முதல் மரியாதை என்பது சமுதாயத்தில் ஒருவருக்கு மற்றவர்களிடம் இருந்து தினம் உடல் அமைப்பால், நடவடிக்கையால் மனதளவில் கிடைப்பது மட்டும் அல்ல. மாறாக, முதல் மரியாதை என்பது சமுதாயத்தில் ஒருவருக்கு மற்றவர்களிடம் இருந்து தினம் அவர் அணியும் உடைக்கு மற்றும் நடவடிக்கைக்கு மனதளவில் கிடைப்பது.

நல்ல உடல் அமைப்பு....கெட்ட துணி வடிவமைப்பு:

          நல்ல உடல் அமைப்பு கொண்ட ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, நன்கு வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணியவில்லை என்றால் அவர்களின் முதல் மதிப்பு (FIRST IMPRESSION) மற்றவர்களிடத்தில் உயராது. இத்தகையோரை நாகரீகம் தெரியாத அநாகரீக மனிதர்களாக சமுதாயத்தில் உள்ள மற்றவர்கள் மனதளவில் எடை போடுவார்கள்.

சுமாரான உடல் அமைப்பு....நல்ல துணி வடிவமைப்பு:

          அதே வேளையில் சுமாரான உடல் அமைப்பு கொண்ட ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, நன்கு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்தால் அவர்களின் முதல் மதிப்பு (FIRST IMPRESSION) மற்றவர்களிடத்தில் மனதளவில் உயரும். இத்தைகையோரை, இன்றைய நவநாகரீக உலகத்தில், மாறுகின்ற உலகிற்க்கு ஏற்ப உடை உடுத்தும் நாகரீக மனிதர்களாக சமுதாயத்தில் உள்ள மற்றவர்கள் எடை போடுவார்கள்.

பெண்களுக்கு - "ஆள் கால், ஆடை முக்கால்":

          "ஆள் பாதி, ஆடை பாதி" என்ற முதுமொழி இன்றைய சூழ் நிலையில், ஆண்களுக்குப் பொருந்தும். அதே வேளையில், பெண்களுக்கு "ஆள் கால், ஆடை முக்கால்" என்ற புது மொழிதான் பொருந்தும். இன்றைய நவநாகரீக உலகத்தில், ஆண்களை விட, பெண்கள் உடைக்காக அதிக கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் முக்கியத்துவம் தருகிறார்கள். மேலும், தன்னுடைய அழகிற்கு, அழகூட்டுவதில் ஆண்களை விட, பெண்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

தையல் தொழில் வாய்ப்புகள்:

          இன்றைய பெண்கள், நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் என்று மாறிவரும் பேஷனுக்கு ஏற்ப விதம் விதமாக, ஆடை அணிய விரும்புகிறார்கள். அந்த ஆடையும் விதம் விதமாக வடிவமைப்பு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


          தொலைக்காட்சியின் தாக்கத்தால், உடைகளில் ஒரு டிசைன் பத்து முதல் பதினைந்து ஆண்டு காலத்திற்கு நிலைத்து இருந்த காலம் மலை ஏறிப்போய், ஒரு உடை டிசைன் பத்து வாரம் முதல் பதினைந்து வாரம் சந்தையில் நிற்பதே கடினம் என்ற நிலை இன்றைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது.


          இத்தகைய வேகமான பெண்கள் ஆடை பேஷன் மாற்றத்தில் சிறிய, நடுத்தர, பெரிய மற்றும் மிகப் பெரிய தொழில் வாய்ப்புகள் நம் கண் எதிரே கொட்டிக் கிடக்கின்றன. வளரிளம் பருவப் பெண்ணே, இன்று முதல் விதவிதமாக ஆடை அணிய விருப்பப்படுவதை தாண்டி, அந்த விதவிதமான ஆடையை வடிவமைக்க ஆசைப்படு. உடை வடிவமைக்கும் நுனுக்கத்தை தெரிந்து கொண்டால், தையல் கலையும் உன் வசப்படும் ! தையல் கலையில் உன் ஊர், உன் வசப்படும் ! !

வளமான எதிர்காலம்:

          இப்பொழுதாவது தையல் கலையின் மூலம் வளமான எதிர்காலம் உங்களுக்குத் தெரிகிறதா?


          உங்கள் வளமான எதிர்காலம் பேஷன் உடையின் மூலம் மனதில் தெரிகிறதா ?


          குறைந்த பட்சம் பெண்கள் ஆடையில் உள்ள மிகப் பெரிய வாய்புகள் அரை, குறையாக தெரிகிறதா?


          நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். தையல் கலையில் உள்ள வளமான எதிர்காலத்தை ஒருவர் கணக்கிட வேண்டும். இன்றைய இந்திய மக்கள் தொகை 115 கோடியைக் கடந்துவிட்டது. என்றைய, தமிழக மக்கள் தொகை 6.5 (ஆறரை)கோடியைத் தாண்டி விட்டது.

90 கோடி பெண்கள் துணி தமிழகத்தில் வருடத்திற்க்கு தேவை:

          2001 - ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழக மக்கள் தொகை 6,24,05,679. அதில், பெண்களின் எண்ணிக்கை 3,10,04,770. இதில் ஆறு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 33,02,107. 2001-ல் ஆறு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், இன்று 2011-ம் வருட வளரிளம் பெண்.


          இத்தகைய 3 கோடி பெண்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக தேவையான் உடை, 4 முதல் 5 எண்ணிக்கை இருக்கும். அது தவிர ஒவ்வொரு பெண்மணியிடம் குறைந்தது 5 மடங்கு இருப்பு அல்லது ஸ்டாக் துணி வீட்டில் இருக்கும். சுமார் 3 கோடி பெண்கள், 5 துணி தினம் தேவை, 25 துணி ஸ்டாக் ஆக மொத்தம் 30 துணிகள், 3 கோடி பெண்களுக்கு தேவை 90 கோடி துணிகள். இவை சுமார் ஒரு வருடத்திற்க்கு மட்டும் தமிழகத்திற்க்கு தேவை.


          இதில் இருந்து ஆடை வடிவமைப்புக் கலையின் அல்லது தையல் கலையில் உள்ள வாய்ப்பை ஒருவர் உணர்ந்து கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் ஆடை வடிவமைப்பில் உள்ள வாய்ப்புகளை வளரிளம் பருவப்பெண் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். இதன் தேவை மக்கள் தொகை பெருக்கத்தால் உடைகளின் தேவை மேலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்லும்.

நிழல்....நிஜம்:

          இந்த உலகில் எந்த ஒரு பொருளும் அல்லது நிகழ்வுகளும் இரண்டு முறை உருவாக்கப்படுகிறது. முதலில் ஒரு மனிதனின் எண்ணத்தில், பிறகு நிஜத்தில், அதே போல், ஒரு ஆடை உருவாக்கத்தில், ஆடை வடிவமைப்பவரின் மன வண்ணம் மற்றும் கை வண்ணம் மிக முக்கியம்.

துணியிலே கை வண்ணம் காணும் வித்தகர்:

          ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பவர், ஒரு துணியைப் பார்த்த உடன், அந்தத் துணியை அணிபவரைப் பார்த்தஉடன், அதில் இருந்து கடைசியாக அமையவிருக்கும், அழகிய தைத்த துணியின் வடிவத்தை மனதில் கொண்டு வந்து இருத்த வேண்டும்.


          பிறகு, மனதில் உள்ள அழகிய வடிவமைக்கப்பட்ட உடைக்கு தகுந்தார் போல், துணியை வெட்டி, ஒவ்வொரு தையலாக, ஒவ்வொரு உடை பாகத்தையும் மிகவும் கவனத்துடன் உருவாக்கி, கடைசியில் ஒரு அழகான ஆடையை உருவாக்கும் ஒரு வித்திகாரிதான் தையல் கலை வித்தகர். இதற்கு அபரித பொறுமை, அளவில்லாத நிதானம் என்ற பல பண்புகள் வேண்டும். இந்தப்பண்புகள், தமிழக வளரிளம் பருவப் பெண்களிடம் இயற்கையிலேயே குடி கொண்டு உள்ளது.

டெயிலர்...பேஷன் டிசைனர்:

          இன்றைய காலகட்டத்தில், தையல் கலை என்ற கலை, ஆடை உருவாக்கும் கலை என்ற நிலையைத் தாண்டி, ஆடை வடிவமைப்பு என்ற நிலையை அடைந்து உள்ளது. இன்று நகரங்களில், பெண்கள் ஆடை உருவாக்குபவர்களை விட, ஆடையை வடிவமைப்பவர்களைத் தேடுகிறார்கள். உடலை மறைக்க ஆடை மற்றும் மனிதன் தட்ப வெட்ப சூழ்நிலையில் இருந்து காத்துக்கொள்ள உடை என்ற நிலைகளை தாண்டி, பிறர் உள்ளத்தை மயக்க ஆடை என்ற நிலை வேகமாக வளர்ந்து வருகிறது.

தையல் கலை....தையல் தொழில்:

          தையல் பயிற்சி என்பது மன ஒரு நிலைப் பாட்டுக்கு ஒரு சிறந்த பயிற்சி, ஒரு பெண்ணின் மனதில் தையலும், தையலில் மனமும் ஈடுபாடு கொள்ள வேண்டும். இதை கலை நயத்துடன் செய்யும் போது அதற்க்குப் பெயர் தான் "தையல் கலை". அந்த தையல் கலையை, தொழில் நயத்துடன், தொழில் பக்தியுடன், தொழில் சிரத்தையோடு செய்யும் போது அதற்கு பெயர் "தையல் தொழில்".


         "செய்யும் தொழிலே தெய்வம். அதில் நமது திறமைதான் செல்வம்" என்ற கோட்பாட்டோடு, முழுமையாக ஒரு பெண் இந்தத் தையல் கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இரவு பகலாக தையல் கலையில் ஈடுபடும் போது கிடைப்பதுதான் "வியாபார வெற்றி".

தையல் கலைப் பயணம்...

          வளரிளம் பருவப் பெண்ணே, முதலில் தையல் கலையைப் பற்றி விழிப்புணர்வு பெற்றூ, பிறகு, உனது பொழுது போக்கு நேரத்தை ஆரோக்கியமான வகையில், இந்த தையல்கலைக்காக செலவிடு. பிறகு, தையல் கலையில் உள்ள நெளிவு, சுழிவுகளைத் திறம்படத் தெரிந்துகொள். முதலில் உன் ஆடையை தன் கையை தனக்கு உதவி என்ற வகையில் நீயே சிறந்தது முறையில் வடிவமைக்கத் தெரிந்துக்கொள். பிறகு, உன் வீட்டில் உள்ளவர்களின் ஆடையை சிறப்பாக வடிவமைக்கத் தெரிந்துக்கொள். பிறகு, உன் தெருவில் உள்ளவர்களின் ஆடையை சிறப்பாக வடிவமைக்கத் தெரிந்துகொள். பிறகு உன் ஊரில் உள்ளவர்களின் ஆடை வடிவமைப்பு என்று உன் தையல் கலை வண்ணத்தை உலகத்திற்கே ஒளிவிடச் செய்.
உன் தையல் கலை வாழ்க்கை.....உன் கையில் !.

தையல் கலை வரலாறு

தையல் இயந்திர வரலாறு மற்றும் பிரம்மிக்கத் தக்க தொழில் நுட்ப வளர்ச்சி.

தையல் கலையின் வளர்ச்சி, நேற்று, இன்று, நாளை.


தையல் கலை - நேற்று:

          தையல் என்றால் பெண் என்று பொருள். ஆகவே எல்லா பெண்களும் குறிப்பாக வளரிளம் பருவப் பெண்களும், தையல் கற்றுக் கொள்ள வேண்டும். பண்டைக் காலம் முதல் மனிதன் தனது ஆடையை ஊசியன் துணைக் கொண்டு கையினால் தைத்தான். அது காலப்போக்கில், விஞ்ஞான வளர்சிக்கு ஏற்ப கைத் தையல், மெஷின் தையலாக மாற்றம் பெற்றது.

தையல் கலையின் வேகமான வளர்ச்சி:

          கடந்த 160 வருடத்தில் தையல் மெஷின் வந்ததால் தையல் வேலை குறிப்பாக துணிகள் தைப்பது என்ற வேலை சுலபமானது. துணிகள் தைக்கும் வேகம் அதிகரித்தது. விளைவு, தையல் மெஷினில் தைத்து துணிகளின் விற்பனை வேகம் அதிகரித்தது.

தையல் கலை - இன்று:

          இன்று தையல் கலை, தையல் தொழிலாக மாற்றம் பெற்று இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு  அளிக்கும் கற்பகதருவதாக மாறி உள்ளது. வளரிளம் பெண்களின் கற்பனை வளத்திற்கு ஓர் மிகப் பெரிய வடிகால் தையல் கலை, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, ஓரு ஆரோக்கிய பொழுதுபோக்கு தையல்கலை என்று சொன்னால் மிகையாகது.

திடீர் உடை அல்லது ரெடிமேட் உலகம்:

          இந்த 21 ஆம் நூற்றாண்டில், விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்த காலத்தில், திடீர் இட்லி, திடீர் சாம்பார், திடீர் குலோப்ஜான், திடீர் உடை அல்லது ரெடிமேட் உலகம் என்று உலகம் மாறிவிட்ட கால கட்டத்தில், யார் சார் வரும் காலத்தில் துணியைத் தைக்கப் போகிறார்கள்? துணி தைக்கும் கலைக்கு, துணி தைக்கும் தொழிலுக்கு எதிர்காலம் உண்டா? வளரிளம் பருவப் பெண்களான நாங்கள், இந்த கம்பியூட்டர் யுகத்தில் தையல் கலையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமா? என்று பல்வேறு சந்தேகங்கள் வளரிளம் பருவத்தில், டீவி, இன்டர்நெட் உலகில் மூழ்கி உள்ள உங்கள் மனதில் எழும்.

தையல் கலை - நாளை:

          என்னுடைய தெளிவான தீர்க்க தரசினமான பதில் என்னவென்றால், இன்னும் ஆயரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த தையற்கலைக்கு அழிவில்லை. மூன்றாம் பகுதியில் பார்த்தது போல், இன்று கம்பியூட்டர் துணை கொண்டு தானாக மெஷின் எம்ராய்டரி செய்யும் அளவுக்கு தையல் கலை விஞ்ஞானம் முன்னேறிவிட்டது. எத்தனை கம்பியூட்டர் வந்தாலும் உடை என்ற ஒன்று இந்த உலகில் மனிதன் உருக்க இருக்கும் வரை, தையல் கலை இந்த மண் உலகில் இருக்கும்.

தையல் கலை - ஆயிரம் காலத்துப் பயிர்:

          திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள். அதேபோல், பெண்களைப் பொருத்தவரை தையற்கலை என்பது ஆயரம் காலத்து பயிர்.

தையல்கலை ஆக்கபூர்வ பொழுது போக்கு:

          ஒவ்வொரு பெண்ணும் குறிப்பாக வளரிளம் பெண்ணும், வளரிளம் பருவக் காலத்தில், தனுது பொழுது போக்கு நேரத்தை இந்த தையற்கலைக்கு செலவு செய்தால், அதற்கு பிரதிபலனாக பலமடங்கு பலனை, வாழ்நாள் முழுவதும் அடையலாம். தையல் கலை, ஒரு ஆக்கபூர்வமான பொழுதுபோக்கு. மேலும் தையல் கலை வளரிளம்  பருவப் பெண்ணின் ஆரோக்கிய  வாழ்க்கைக்கு அடித்தளமிடும் கலை.

உடற்பயிற்சி  இன்மை....உள்ளப் பயிற்சி இன்மை:

          இன்றைய சுகந்திரமயமான  விஞ்ஞான முன்னேற்ற உலகத்தில்   இன்றைய பெண்கள் பலப்பல இயந்திரத்திற்கு அடிமையாகி, உடற் பயிற்சி இன்றி, உள்ளப் பயிற்சி இன்றி, தவறான உணவு பழக்கத்துக்கு அடிமையாகி, தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு இல்லை, இல்லை... தொல்லைகாட்சி நிகழ்சிகளுக்கு அடிமையாகி நேரத்தை ஆக்க வழியில் செலவு செய்யமால், உடலையும் மற்றும் உள்ளதையும் போட்டி போட்டுக்கொண்டு, தான் செய்வதன் விளைவு அறியாது பாழ்படுத்தி கொள்கிறார்கள்.

விடுதலை:

          நமது முன்னோர்கள் பெண் விடுதலை பற்றி பல்வேறு வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்கள். உண்மையான பெண் விடுதலை என்பது உடலும், உள்ளமும் இயந்திர மயமாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில், இயந்திர ரீதியாக வாழ்க்கையை, வாழாமல் பகுத்தறிவின் துணை கொண்டு, உடல் ஆரோக்கியத்தோடு, உள்ள ஆரோக்கியத்தோடு உயரிய வாழ்க்கைக்கு, தையல் கலை ஒரு வளரிளம் பருவப் பெண்ணுக்கு பேருதவியாக அமையும்.

உயரிய எண்ணம்:
          இத்தகைய உயரிய 'விடுதலை' வாழ்க்கையை ஒவ்வொரு வளரிளம் பருவப் பெண்ணும் வாழ, நமது தேச பிதா மகாத்மா காந்தி அடிகள் ஒரு வழிமுறையை காட்டுகிறார். அந்த வாழ்க்கை முறைகயை "எளிமையான வாழ்க்கை, உயரிய எண்ணம்" (Simple living & High Thinking) என்று குறிப்பிட்டார்.

எளிமையான வாழ்க்கை:

          ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வசதி வாய்ப்பு இல்லாவிட்டாலும், தியாக மனப்பான்மையோடு, இந்திய நாட்டின் பாதுகாப்பான வளர்ச்சியை கருத்தில் கொண்டு எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், அதே நேரத்தில் நாடு முன்னேற வேண்டும், வேகமாக முன்னேற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தை தினம், தினம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி அடிகள் கேட்டுக்கொண்டார்.

கிராம முன்னேற்றமே இந்திய முன்னேற்றம்:

          இந்திய மக்கள் தொகையில் 70 சதவித மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். ஆகவே, நமது கிராமங்கள் முன்னேற்றம் அடைந்தால் தான், இந்தியா பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும் என்று காந்தி அடிகள் தெளிவாகக் கனவு கண்டார். இந்தியர் ஒவ்வொருவரும் சுதந்திர இந்தியாவில் செய்ய வேண்டிய கடமைகளாக காந்தி அடிகள் கிராம முன்னேற்றத்தைக் குறிப்பிட்டார்.


இராட்டை:

         மேலும், காந்தி அடிகள் ஆங்கிலேயரால் இயந்திரம் அல்லது மேஷின்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட துணிகளை புறக்கணிக்க செய்துஇராட்டை மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், தன் கையே தனக்கு உதவி என்ற வகையில் தனக்கு தேவையான துணிகளை தானே உற்பத்தி செய்ய இந்திய மக்களை பழகச் சொன்னார்.

வெள்ளையனே வெளியேறு :

         இந்த சிறிய காந்திஜியின் சிந்தனை பொறி, பெரிய அளவில், 'வெள்ளையனே வெளியேறு ' என்ற இயக்கமாக 1942 ஆம் ஆண்டு மாறி, 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 15 ஆம் நாளில் இந்தியா சுதந்திரம் பெற மிகப் பெரிய அடித்தளமாக அமைந்தது

         சுருங்க சொன்னால், காந்திஜியின் உடையைப் பற்றிய சிந்தனை, குறிப்பாக உடைக்கான துணியை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற மாறுபட்ட சிந்தனையே இநதிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக சுதந்திர இந்தியாவின் அடித்தளமாக அமைந்தது.

தையற்கலையின் எதிர்காலம் :

          சார், இந்த பழைய கதைகள் எல்லாம் எங்களுக்கு வேண்டாம்.
          இன்றைய விரைவான சூழலில், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற காலக்கட்டத்தில் உள்ள எங்களுக்கு தையற்கலை அவசியம் தானா?
          அதுவும் வளரிளம் பருவப் பெண்களுக்கு இந்த காலக்கட்டத்தில் தையல் கலை அவசியம் தானா?
          இந்த தையல் கலையை கற்றுக் கொண்டு நான் நாலு காசு அல்லது நாலு ரூபாய் பார்க்க முடியுமா?
          இன்றைய வேகமாக மாறி வரும் "திடீர் உடை" (ரெடிமேட்) சூழலில் தையல் கலைக்கு எதிர்காலம் உள்ளதா? என்பதுதானே உங்களுடைய மனச் சந்தேகங்கள்.

90 கோடி பெண்கள் துணி தேவை :

         ஏற்கனவே இந்தப் புத்தகத்தின் முதல் பகுதியில் கோடிட்டு காட்டி உள்ளபடி, தமிழகத்தில் உள்ள பெண்களின் எண்ணக்கை சுமார் 3 கோடி. இந்தப் பெண்களுக்குக் குறைந்துது 4 முதல் 5 துணிகள் தினம், தினம் உடுத்தவேண்டும். அது சுடிதார் டாப்பாக இருக்கலாம், சுடிதார் பேண்டாக இருக்கலாம்,ஜாக்கெட்டாக இருக்கலாம், பெட்டிகோட்டாக இருக்கலாம். குறைந்தது 5 செட் தேவை இருப்பில், 15 கோடி பெண்கள் துணி தினம் தேவை, 5 செட், ஆக மொத்தம் 90 கோடி பெண்கள் துணிகள் வடிவமைக்க வேண்டும்.
 
இரண்டு லட்சம் தையல் கலை நிபுணர்கள் :

          இன்று தமிழகம் முழுவதும், அதிக பட்சமாக இரண்டு லட்சம் முழு நேர தையல் கலை நிபுணர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு லட்சம் பேர், திருப்பூர், சென்னை , கோவை, திருநெல்வேலி, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் பெரிய தொழிற்ச்சாலைகளில் பணியாற்றுகிறார்கள்.
          தமிழகத்தில் அத்தகைய ஒரு லட்சம் நபர்களை தவிர்த்தால், மீதம் உள்ள ஒரு லட்சம் தையல் கலை நிபுணர்கள்தான், இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இவர்கள் பரந்து விரிந்து உள்ளனர். இந்த ஒரு லட்சம் தையல் கலை நிபுணர்களில், பெண்கள் ஆடைகளை வடிவமைப்பவர்கள் எண்ணக்கை சுமார் 40 ,௦௦௦ பேர் தான்.

இரண்டு மாத டெலிவரி :

         இன்றைய நிலையில், குறிப்பாக பெண்கள் தையல் கலை நிபுணர்கள் தேவை ஒரு லட்சத்திற்கு மேல் தமிழகத்தில் மட்டும் உள்ளது. நீங்கள் கூட உங்கள் துணியைத் தைய்க்கக் கொடுக்கும் போது ஒரு நிகழ்வைப் பார்க்கலாம்.
         குறைந்த பட்சம் இரண்டு வாரம் முதல் ஒரு மாதம் வரை, பல சமையம் நீங்கள் கேட்கும் டிசைன் மற்றும் வேலைப்பாட்டுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மாதம் கழித்து உங்கள் தைத்த வடிவமைக்கப்பட்ட துணி டெலிவரியாக கிடைக்கும். மேலும், கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். அந்த தையல் வடிவமைப்பாளர், இரவு, பகல் என்று எப்பொழுதும் தைத்து கொண்டே இருப்பார். அப்படி இருந்தும் ஒரு வாரம் முதல் இரு மாதம் வரை என்று துணிகள் வெயிட்ங் லிஸ்ட் அவரிடம் இருக்கும்.மூன்று மாத டெலிவரி:

         தீபாவளி சீசன் என்றல் கேட்கவே வேண்டாம், 3 மாதம் முன்னாலேயே துணி வாங்குவதை அந்த தையல் கலை நிபுணர் நிறுத்திவிடுவார். குறைந்த பட்சம் ஒரு லட்சம் தையல் கலைஞர்கள் உடனடியாக தமிழகத்தில் பெண்கள் உடையை மட்டும் வடிவமைக்கத் தேவை.
         பெண்கள் உடையை வடிவமைத்துத் தைக்க, தையல் கலைக்கு உள்ள சந்தை வாய்ப்பை புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சியை நான் அடுத்த பகுதியில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
         தையல் கலையில் நாலு காசு இல்லை... நாலு ரூபாய் இல்லை... நாலு லட்சம் ரூபாய் முதல் நாள் கோடி ரூபாய் வரை பணம் சம்பாதிக்க வைப்புகள் உங்கள் ஊரிலேயே உள்ளது.
         தின ரூபாய் 500 முதல் 1000 வரை ஒரு வளரிளம் பருவப் பெண் வீட்டில் இருந்தபடியே, தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், எத்தகைய வசதி வாய்ப்பு இருந்தாலும் சம்பாதிக்க முடியும். வளரிளம் பருவப் பெண்ணே, உனக்கு தேவை, முதலில் தையல் கலையில் ஆர்வம். அடுத்து புதிய புதிய தையல் கலை நுணுக்கங்களை, தினம் தினம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தணியாத தாகம். பிறகு, தினம் அந்த நுணுக்கங்களை செயல்படுத்தி, ஆடையை வடிவமைக்கும் தொடர் பயிற்சி. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் கின்னஸ் சாதனையும் சாத்தியமே!

பெண்களின் ஆடை வடிவமைப்பில் உள்ள மிகப் பெரிய தொழில் வாய்ப்புகள்.


 5 . பெண்களின் ஆடை வடிவமைப்பில் உள்ள மிகப் பெரிய தொழில் வாய்ப்புகள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் என்னிடம் படித்த ஒரு MBA மாணவரைத் தற்செயலாக சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எல்லா மாணவர்களையும் பார்த்து MBA  பேராசிரியர் என்ற முறையில் சாதாரணமாகக் கேட்பது போல், அவரிடமும் 'எங்கே வேலை பார்க்கிறீர்கள்?' என்று நான் கேட்டேன்.

5 . 1 படிப்பு... வேலை... தொழில்...

             அதற்கு அவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் MBA படிப்பை உங்களிடம் படித்து முடித்தவுடன் ஆறு மாதங்களுக்கு ஓரிரு நிறுவனங்களில் வேலை பார்த்த பின், திருச்சியில் உள்ள எனது தந்தையின் தையல் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தற்சமயம் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை முழு நேரப் பணியாக கவனித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

5 . 2 தையல் தொழில் - ஏறு முகம்

              நான் எப்படி உங்கள் தையல் தொழில் இருக்கிறது? என்று அவரைப் பார்த்து மிகச் சாதரணமாக நான் கேட்டேன். நான் அந்த கேள்வியை கேட்கும் போது என் மனநிலை, MBA படித்த மாணவனுக்கு ஒரு தையல் கலையில் என்ன வேலை என்று நினைத்தேன்.
  
              "மிகவும் நன்றாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

               தையல் தொழில் நீங்கள் திருப்தியாக ஈடுபட்டு இருக்கிறீர்களா? அல்லது வேறு வலி இல்லாமல் ஈடுபட்டு இருக்கிறீர்களா என்று அவரைப் பார்த்து கேட்டேன்.

                ஆரம்பத்தில் அரை மனதுடன் தான் இந்த தையல் தொழிலில் ஈடுபட்டேன். ஆனால், இப்பொழுது என்னை முழுமையாக இந்த தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டு உள்ளேன்.

                 அடித்து நான் கேட்டேன், MBA- ல் படித்த பாடங்கள் உங்கள் தையல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறதா? என்று அதற்கு அவர், என் தந்தை பல ஆண்டுகளாக செய்து வந்த தையல் தொழிலை என் MBA  படிப்பு அறிவைக் கொண்டு குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சி அடையச் செய்து, திருச்சியில் எங்கள் கடையின் பெயரை நம்பர் ஒன் என்று நிலை நிறுத்தி உள்ளேன் என்றார்.

தையல் கலையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் வாய்ப்புகள்.


தையற்கலையின் நிலைகள் :

"சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்' என்ற வாக்கிற்கு இனங்க தையல் கலையைப் பழகப் பழகத் தான் தையல் கலையின் நுனுக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வளரிளம் பருவப் பெண்ணுக்கு ஆர்வம் பிறக்கும்.
அத்தகைய ஆர்வத்திலிருந்து தையல் கலையைப் பற்றிய பல்வேறு நுனுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேடுதல் வளரிளம் பருவப் பெண்ணுக்கு ஆர்ம்பம் ஆகும்.
அத்தகைய தையல் கலை பற்றிய தேடுதலின் விளைவாக, ஒரு வளரிளம் பருவப் பெண் தையல் பயிற்சி என்ற நிலையைத் தாண்டி, தையல் கலை நிபுணராக மாற வேண்டும் என்று செயலில் இறங் குகிறார்.
தையல் பழகும் போது வளரிளம் பருவம் பெண் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது , யாருக்கு துணியைத் தைக்கப் போகிறோம் என்பது. அதாவது , ஆண்களுக்காகவா அல்லது பெண்களுக்காகவா, வளர் இளம் பருவ ஆடவருக்கா அல்லது பெண்களுக்கா, அல்லது ஆண் குழந்தைகளுக்கா என்று தெரிந்து கொண்டு , புரிந்து கொண்ட பின் அவரவரின் உடல் அமைப்புக்கு ஏற்ற வகையில் தைக்க ஆரம்பிக்க வேண்டும்.


தையல்க் கலையில் சுய வேலை வாய்ப்பு :

கலை ஆர்வமுள்ள ஒவ்வொரு வளரினம் பருவப் பெண்ணும் தையல் கலையைக் கற்று , அதில் தேர்ந்து சுயமாக வேலை செய்து, குடும்பப் பொருளாதாரத்தைப் பெருக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டு துவக்கத்திலிரூந்து இந்நாள் வரைக்கும் நாளுக்குநாள் இந்தத் தையல் தொழில் நாளொரு வண்ணம், பொழுதொரு மேனி என்ற வகையில் வளமான தொழிலாக மாறி உள்ளது.
இந்தத் தையல் தொழிலில் சுய வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் இந்தத் தையல் துறை மேலும் வேகமாக வளர்ச்சி பெற அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பகுதி நேர தையல் கலைஞர்

முதலில், சுய தொழிலாக செய்ய குடும்ப சூழ்நிலை அமையாத பெண்கள், தையல் கலையை முழு நேரத் தொழிலாகக் கொண்டு வருவாய் ஈட்டிவரும் தையல் துறைக் கலைஞர்களுடன் இணைந்து, பகுதி நேர தையல் கலைஞராக,ஜாப் ஆர்டர் எடுத்து செய்து, தையல் கலை வளர்ச்சியில் உள்ள தொழில் வாய்ப்புகளைப் பயன் படுத்திக் கொண்டு குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.

காலாட்டியே பிளைத்துக் கொள்ளலாம் 

காஞ்சிபுரத்திற்குப் போனால், காலாட்டி பிழைத்துக்கொள்ளலாம் என்று கூறுவார்கள், அதாவது, பட்டுத் தறியில், வேலைக்குச் சென்று, காலை ஆட்டினால் பணம் சம்பாதிக்கலாம் என்பார்கள். இன்று அத்தகைய சங்கடங்கள் வளரிளம் பருவப் பெண்களான உங்களுக்கு வேண்டாம். உங்கள் ஊரிலேயே, உங்கள் வீட்டிலேயே உங்கள் காலை உங்கள் இஷ்டம் போல், தினம் தினம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தையல் மெஷினைக்கொண்டு மதி நுட்பத்துடன் ஆட்டினால், தையல் மெஷின் அருகில் அமர்ந்து மன ஒருமைப் பாட்டோடு காலால் தினம் தினம் மிதித்தால், பணம் வந்து உங்கள் வீட்டில் கொட்டும், இது கதை இல்லை. நிஜம் செய்துதான் பாருங்களேன்!.

ஒரு கல்லில் மூன்று மாங்காய் :

குடும்பத் தலைவனின் வருவாய் குடும்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கவில்லை அல்லது குடும்ப வருவாய், குடும்ப செலவுக்குப் போதவில்லை என்ற நிலையில், குடும்பத் தலைவி என்ற முறையில், ஒரு பெண் தையல் கலையில் ஈடுபட்டு வீட்டில் இருந்த படியே மற்ற குடும்பப் பொறுப்புகளைக் கவனித்தபடி, அவரவர் தெரு மற்றும் அவரவர் நகரில் உள்ளவர்களின் துணிகளை வங்கித் தைத்து அவரவர் கை வண்ணத்தை வெளிப்படுத்தலாம்.

இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் உள்ளது . ஒன்று குடும்ப தலைவியின் நேரம் பயனுள்ள வழியில் , ஆக்க வழியில் செலவு ஆகிறது. இரண்டவது குடும்ப தலைவியின் உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம் அதிகரிக்கிறது. மூன்றாவதாக, குடும்பத் தலைவியின் சிறிய தையல் முயற்சியால், குடும்ப வருவாயும் கணிசமான அளவு அதிகமாகிறது


தையல் இயந்திர பாகங்கள்தையல் இயந்திர வளர்ச்சி :

           தையல் துறையில் உலகம்  முழுவதிலும்  இருந்து  பல்வேறு  கம்பெனியினர் செய்த தையல் இயந்திரங்கள் வெளிவந்து வியாபாரரீதியில்  முன்னேற்றம்  அடைந்துள்ளன.

          தையற்கலை வளர்ச்சி அடைந்து  வரும் இன்றைய சூழ்நிலையில் தையல் இயந்திரத்தின் வளாச்சி , தையல் தொழில் வாய்ப்பில் ஒரு முக்கியப்  பங்கை வகிக்கிறது. தையல் மெஷின் மிகவும் முக்கியமான தையல் சாதனம். பலப் பல தையல் மெஷின்கள் சந்தையில் கிடைக்கின்றன


          ஒவ்வொரு தையல் மெஷினிலும் அதற்கென தனியான அம்சங்களும், பயன்களும் உள்ளன. சாதாரண லாக் தையல் மெஷினில் இருந்து, மிகவும் முன்னேறிய கம்ப்யூட்டர் நுட்பத்தைப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் தையல் மெஷின்கள் வரை பல ரகங்கள் உள்ளன.

எலக்ட்ரானிக் தையல் மெஷின்:

          எலக்ட்ரானிக் தையல் மெஷின்களில் பைப்பிங், பைண்டிங், ரஃப்ள்ஸ், பிளீட்டிங், டார்னிங், ஹொம்மிங், பட்டன் துளை போடுவது போன்ற பற்பல வேலைகள் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் நடைபெறுகின்றன.


          எந்த ஒரு தையல் மெஷினிலும் அடிப்படைத் தேவை என்னவென்றால், அதன் நூல் மேலும் கீழும் ஏறி இறங்கி தையல் போடும் வகையில் ஊசியும், ஷட்டிலும் துல்லியமான நேரப்படி இயங்கவேண்டும். மெஷின் பிரஷர் ஃபுட் துணியை உரிய இடத்தில் வைத்து, முன்புறம் நகர்த்தி, ஷீம்மை உருவாக்குகிறது.

லாக் தையல் மெஷின்:
            
          உலகெங்கும்  அதிக அளவில் ஒற்றை ஊசி லாக் தையல் மெசின்தான் பயன்படுத்தப்படுகிறது.சங்கிலித் தையல் மெஷின்களும், ஒவர் எட்ஜ் தையல் மெஷின்களும் பொதுவாக பின்னல் வேலைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

    தையல் மெஷினை எவ்வாறு இயக்குவது என்ற அடிப்படைத் தவகல்களை தெரிந்து கொண்டால், எந்த தையல் மெஷினையும் சரியான முறையில் பயன்படுத்தி, தையல் கோளாறுகளை சரிசெய்ய முடியும்.

    சாதாரண லாக் தையல் மெஷினை தட்டை படுகை தையல் மெஷின் என்றும் சொல்கிறார்கள். அது நேராக மட்டுமே தையல் போடுகிறது.
லாக் தையல் :

           இருபுறங்களில் இருந்தும் தையல் ஒரே மாதிரியாகத் தெரிகிறது. மிகவும் தட்டையாக முற்றிலும் பாதுகாப்பானதாக, அவ்வளவாக வெளியில் தெரியாமல் தையல் இருக்கிறது. உடையைப் பயன்படுத்தும்போது நூல் அறுந்தால் கூட தையல் பிரிவதில்லை. ஏனென்றால், இரண்டு நூல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து லாக் ஆகியுள்ளன.

          எனவேதான் இத்தகைய தையல் லாக் தையல் என்று அழைக்கப் படுகிறது. மேலே உள்ள ஸ்பூலில் இருந்து வெளிப்படும் ஊசிநூலும், கீழே உள்ள பாபினில் இருந்து வெளிப்படும் பாபின் நூலும் இணைந்து லாக் தையல் விழுகிறது.

          சரியாக தையல் விழும்போது, மேலிருந்தும் கீழிருந்தும் சமமான அளவுக்கு நூல் பயன்படுத்தப் படுகிறது. துணியின் மத்தியில் நூல்கள் லாக் ஆகின்றன.


லாக் தையல் மெஷின் வகைகள் :

          இரண்டு வகையான லாக் ஸ்டிட்ச் மெஷின்கள் உள்ளன. அவைகள், ஒன்று சாதாரண தையல் மெஷின், காலால் இயக்க கூடியது. மற்றொண்டு லாக் ஸ்டிட்ச் பவர் தையல் மெஷின் என்பது. சாதாரண கறுப்புக் கலர் லாக் ஸ்டிட்ச் தையல் மெஷினிக்கும், பவர் மெஷினான வெள்ளைக் கலர் லாக் ஸ்டிட்ச் தையல் மெஷினிக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன


அவைகள்:

          1 . வெள்ளை நிற பவர் தையல் மெஷின் மிகவும் விரைவானது. அது சராசரியாக ஒரு நிமிடத்தில் 5000 தையல்கள் போடுகிறது. ஆனால், சராசரி கறுப்பு நிற சாதா தையல் மெஷினோ 800 தையல்களுக்கு மேல் போடுவதில்லை. அதேவேளையில் கைத்தையல் மெஷின் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக 300 தையல்கள் மட்டும் தான் போடுகிறது.

          2 . பவர் தையல் மெஷினில், நீடில் லிஃப்ட் மூலம் பிரஷர் ஃபுட் கட்டுப்படுத்தப் படுகிறது. ஆனால், சாதாரண கறுப்பு நிற வீட்டுத்தையல் மெஷினில், நீடில் பாருக்குப் பின்னால் உள்ள ஒரு லீவரைப் பயன்படுத்தி இது கையால் இயக்கப்படுகிறது.

          3 . சாதாரண தையல் மெஷினில் உள்ள த்ரோட் பிளேட், ஷீம் கைடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இது தொழிற்சாலை தையல் மெஷினில் இருப்பதில்லை .

          4 . பவர் மெஷினில் பிரஷர் ஃபுட்டுக்கு இரண்டு பெரு விரல்களுக்கு இடையே குறுகலான திறப்புதான் உள்ளது. இது துணியை உறுதியாகவும், இறுகவும் பற்றுகிறது.

          5 . பவர் மெஷினில் உள்ள பிளேட்டில் உள்ள த்ரோட் பிளேட்டில் சிறிய உருண்டையான ஊசித்துளை உள்ளது. சாதாரண தையல் மெஷினில் இது பெரிதாகவும் ஓவல் வடிவிலும் உள்ளது. இதனால் தையல் பிரச்சனைகள் குறைகின்றன.சாதாரன தையல் மெஷினின் பாகங்கள் :
  கருப்பு தலை மெஷின் :


    தையல் கலையில் ஆரம்ப நிலையில் இருக்கும் வளரிளம் பருவப் பெண்கள், பவர் தையல் மெஷினின் வெவ்வேறு பாகங்களைப்   பற்றிப்  புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

1 .ஹேன்ட் வீல்மெஷினின் வலது புறத்தில்  ஹேன்ட் வீல் உள்ளது . சாதா தையல் மெஷின். இது கையால் அல்லது பெல்ட்டால் சுழற்றப்படுகிறது. பவர் தையல் மெஷினில் இது பெல்ட்டினால் இயங்குகிறது. தையல் இயந்திரத்தில் நீடில் பாரின் இயக்கத்தை இது கட்டுப்படுத்தி, மெஷினை சீராக ஓட்டுகிறது.

2 . இயக்கம் நிறுத்தம் ரவுன்ட்இது மெஷினின் வலது ஓரத்தில் சுற்றுர்ம சக்கரத்தை ஒட்டி அமந்திருக்கும். இந்த          ஸ்குருவை இறுக்கமாக (இடமிருந்து வலமாக) மூடினால்  சக்கரம் சுற்றி மெஷின் தைப்பதற்கு உதவுகிறது. இதை வலமிருந்து இடமாக திருகி தளர்த்தினால் சக்கரம் சுற்றும் .ஆனால் தைக்க முடியாது ; நூல் சுற்றலாம் , இப்படியாக இந்த ஸ்குருவை  தளர்த்தியும் , தைக்கும் போது இறுக்கமாக மூடியும் தையல் இயந்திரத்தை இயக்கலாம்.

3 . பிரஷர் புட் : தைக்கும் போது துணியைப் பற்றுவதர்காகப் பயன்படும் ஒரு புட் , இதைக் கழற்றி எடுக்கலாம் . வெவ்வேறு வேலைகளுக்கு ஜிப்பர்   புட் , பிளாஸ்டிக் புட்  என்று வெவ்வேறு வகை புட்கள் உள்ளன.

4 . பிரஷர் புட் லிப்ட்டர் : மேலும் கீழும் தூங்குவதற்காக பிரஷர் புட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு லீவர்

நீடில் பிளேட் : இது ஒரு அரை வட்டத்  தட்டு , இதில் உள்ள துளை வழியாக நூல் கடந்து செல்கிறது . தையலின் போது வழிகாட்டியாக செயல்படுகிறது.

6 . நீடில் கிளாம்ப்  ஸ்குரு : ஒரு முனையில் ஊசி பொருத்தப்பட்டுள்ள தண்டு. ஒரு ஆயில் , அறுந்த நூல், கிழித்த துணி  போன்றவற்றை சேகரிக்கும் உலோகத் தட்டு , இது ஹெட்டுக்குகுக் கீழே உள்ளது.
   
7 . நூல் டென்ஷன் யூனிட் : மேல்  நூலின் இறுக்கத்தையும் , தையல்களின் தரத்தையும் கட்டுப்படுத்தும்  ஒரு அமைப்பு . டிஸ்க் பிரஷரை கட்டுப்படுத்தும் ஸ்பிரிங் மற்றும் நட் உதவியால் நூலின் இறுக்கம் சரி செய்யப் படுகிறது.

8 . நூல் கைடு : ஒரு முனையில் ஊசி போருத்தப்பட்டுள்ள ஒரு தண்டு.

9 . திரேட் டேக் அப் லீவர் : இது ஒரு முக்கியமான பாகம். இதன் வழியாக நூல் கோர்த்து தைக்கும் போது , நூலை மேலும் கீழுமாக அசைத்து  தைப்பதற்கு உதவும்.

10 . பீட் டாக் :பிரஷர் புட்டுக்கு கீழே  உள்ள சிறிய உலோக சாதனம். இதில்  உள்ள பல் தைக்கப்படும்போது துணியை உடனே இழுத்து செல்கிறது . ஒவ்வெரு தையல் முடிந்ததும் இது ஒரு தையல் நீளத்திற்கு துணியை முன்னோக்கி நகர்த்துகிறது.