தையல்கலை ஓர் அறிமுகம்.

                       தையல்கலை ஓர் அறிமுகம்


அழகுக்கு அழகூட்டும் கலை:


          கலைகளுள் சிறந்த ஒரு கலை தையற்கலை, நல்ல உடையை, விதவிதமான உடைகளை உருவாக்கும் கலையே தையல் கலை. காலப்போக்கில் சில கலைகள் அழியும் தன்மையை பெறுவது இயற்கை, ஆனால் இந்தத் தையற்கலைக்கு என்றென்றும் அழிவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

காலத்தால் அழியாத கலை:

          உணவு, உடை, இருப்பிடம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை. ஆகையால் உடை என்ற ஒன்று இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும். எனவே, தையல் கலை என்ற ஒரு கலை இந்த பூமி சுழன்று கொண்டு இருக்கும் வரை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

அடிப்படை உடை....ஆடம்பர உடை:

           அடிப்படைத் தேவையான உடை என்பதைத் தாண்டி, மனிதன் ஆசைவயப்பட்டு, விதவிதமான ஆடையை பேஷனாக உடுத்த ஆரம்பித்தது முதல், விதவிதமான தையல்களின் தேவை அதிகரித்தது. இது எதிர்காலத்தில் மேலும் மக்களின் மனநிலையைப் பொறுத்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆகவே இந்த தையல் கலையில் பணம் ஈட்ட சிறியது முதல் பெரிய வாய்ப்புகள் வரை கொட்டிக் கிடக்கிறது. வளரிளம் பருவப் பெண்ணே, தையற் கலையில் மனம் இருந்தால், வளமான வாழ்க்கைக்கு மார்க்கம் உண்டு.


ஆள் பாதி, ஆடை பாதி:

          இயற்கையில் ஒருவர் அழகில்லாதவர் என்றாலும், செயற்கையில் ஒருவரை அழகுறச் செய்வது இந்தத் தையற்கலையே.


          ஒரு மனிதனின் தன்மையை அவர் அணிந்து இருக்கும் உடையைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒரு மனிதனின் குணத்தையும் மற்றும் ஆரோக்கியத்தையும் அவர் அணிந்து இருக்கும் உடையின் நிறைத்தைக் கொண்டு, உடையின் விதத்தைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். இதைத்தான் நம் முன்னோர்கள் "ஆள்பாதி ஆடைபாதி" என்பார்கள்.


முதல் மரியாதை:

          முதல் மரியாதை என்பது சமுதாயத்தில் ஒருவருக்கு மற்றவர்களிடம் இருந்து தினம் உடல் அமைப்பால், நடவடிக்கையால் மனதளவில் கிடைப்பது மட்டும் அல்ல. மாறாக, முதல் மரியாதை என்பது சமுதாயத்தில் ஒருவருக்கு மற்றவர்களிடம் இருந்து தினம் அவர் அணியும் உடைக்கு மற்றும் நடவடிக்கைக்கு மனதளவில் கிடைப்பது.

நல்ல உடல் அமைப்பு....கெட்ட துணி வடிவமைப்பு:

          நல்ல உடல் அமைப்பு கொண்ட ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, நன்கு வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணியவில்லை என்றால் அவர்களின் முதல் மதிப்பு (FIRST IMPRESSION) மற்றவர்களிடத்தில் உயராது. இத்தகையோரை நாகரீகம் தெரியாத அநாகரீக மனிதர்களாக சமுதாயத்தில் உள்ள மற்றவர்கள் மனதளவில் எடை போடுவார்கள்.

சுமாரான உடல் அமைப்பு....நல்ல துணி வடிவமைப்பு:

          அதே வேளையில் சுமாரான உடல் அமைப்பு கொண்ட ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, நன்கு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்தால் அவர்களின் முதல் மதிப்பு (FIRST IMPRESSION) மற்றவர்களிடத்தில் மனதளவில் உயரும். இத்தைகையோரை, இன்றைய நவநாகரீக உலகத்தில், மாறுகின்ற உலகிற்க்கு ஏற்ப உடை உடுத்தும் நாகரீக மனிதர்களாக சமுதாயத்தில் உள்ள மற்றவர்கள் எடை போடுவார்கள்.

பெண்களுக்கு - "ஆள் கால், ஆடை முக்கால்":

          "ஆள் பாதி, ஆடை பாதி" என்ற முதுமொழி இன்றைய சூழ் நிலையில், ஆண்களுக்குப் பொருந்தும். அதே வேளையில், பெண்களுக்கு "ஆள் கால், ஆடை முக்கால்" என்ற புது மொழிதான் பொருந்தும். இன்றைய நவநாகரீக உலகத்தில், ஆண்களை விட, பெண்கள் உடைக்காக அதிக கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் முக்கியத்துவம் தருகிறார்கள். மேலும், தன்னுடைய அழகிற்கு, அழகூட்டுவதில் ஆண்களை விட, பெண்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

தையல் தொழில் வாய்ப்புகள்:

          இன்றைய பெண்கள், நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் என்று மாறிவரும் பேஷனுக்கு ஏற்ப விதம் விதமாக, ஆடை அணிய விரும்புகிறார்கள். அந்த ஆடையும் விதம் விதமாக வடிவமைப்பு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


          தொலைக்காட்சியின் தாக்கத்தால், உடைகளில் ஒரு டிசைன் பத்து முதல் பதினைந்து ஆண்டு காலத்திற்கு நிலைத்து இருந்த காலம் மலை ஏறிப்போய், ஒரு உடை டிசைன் பத்து வாரம் முதல் பதினைந்து வாரம் சந்தையில் நிற்பதே கடினம் என்ற நிலை இன்றைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது.


          இத்தகைய வேகமான பெண்கள் ஆடை பேஷன் மாற்றத்தில் சிறிய, நடுத்தர, பெரிய மற்றும் மிகப் பெரிய தொழில் வாய்ப்புகள் நம் கண் எதிரே கொட்டிக் கிடக்கின்றன. வளரிளம் பருவப் பெண்ணே, இன்று முதல் விதவிதமாக ஆடை அணிய விருப்பப்படுவதை தாண்டி, அந்த விதவிதமான ஆடையை வடிவமைக்க ஆசைப்படு. உடை வடிவமைக்கும் நுனுக்கத்தை தெரிந்து கொண்டால், தையல் கலையும் உன் வசப்படும் ! தையல் கலையில் உன் ஊர், உன் வசப்படும் ! !

வளமான எதிர்காலம்:

          இப்பொழுதாவது தையல் கலையின் மூலம் வளமான எதிர்காலம் உங்களுக்குத் தெரிகிறதா?


          உங்கள் வளமான எதிர்காலம் பேஷன் உடையின் மூலம் மனதில் தெரிகிறதா ?


          குறைந்த பட்சம் பெண்கள் ஆடையில் உள்ள மிகப் பெரிய வாய்புகள் அரை, குறையாக தெரிகிறதா?


          நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். தையல் கலையில் உள்ள வளமான எதிர்காலத்தை ஒருவர் கணக்கிட வேண்டும். இன்றைய இந்திய மக்கள் தொகை 115 கோடியைக் கடந்துவிட்டது. என்றைய, தமிழக மக்கள் தொகை 6.5 (ஆறரை)கோடியைத் தாண்டி விட்டது.

90 கோடி பெண்கள் துணி தமிழகத்தில் வருடத்திற்க்கு தேவை:

          2001 - ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழக மக்கள் தொகை 6,24,05,679. அதில், பெண்களின் எண்ணிக்கை 3,10,04,770. இதில் ஆறு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 33,02,107. 2001-ல் ஆறு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், இன்று 2011-ம் வருட வளரிளம் பெண்.


          இத்தகைய 3 கோடி பெண்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக தேவையான் உடை, 4 முதல் 5 எண்ணிக்கை இருக்கும். அது தவிர ஒவ்வொரு பெண்மணியிடம் குறைந்தது 5 மடங்கு இருப்பு அல்லது ஸ்டாக் துணி வீட்டில் இருக்கும். சுமார் 3 கோடி பெண்கள், 5 துணி தினம் தேவை, 25 துணி ஸ்டாக் ஆக மொத்தம் 30 துணிகள், 3 கோடி பெண்களுக்கு தேவை 90 கோடி துணிகள். இவை சுமார் ஒரு வருடத்திற்க்கு மட்டும் தமிழகத்திற்க்கு தேவை.


          இதில் இருந்து ஆடை வடிவமைப்புக் கலையின் அல்லது தையல் கலையில் உள்ள வாய்ப்பை ஒருவர் உணர்ந்து கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் ஆடை வடிவமைப்பில் உள்ள வாய்ப்புகளை வளரிளம் பருவப்பெண் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். இதன் தேவை மக்கள் தொகை பெருக்கத்தால் உடைகளின் தேவை மேலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்லும்.

நிழல்....நிஜம்:

          இந்த உலகில் எந்த ஒரு பொருளும் அல்லது நிகழ்வுகளும் இரண்டு முறை உருவாக்கப்படுகிறது. முதலில் ஒரு மனிதனின் எண்ணத்தில், பிறகு நிஜத்தில், அதே போல், ஒரு ஆடை உருவாக்கத்தில், ஆடை வடிவமைப்பவரின் மன வண்ணம் மற்றும் கை வண்ணம் மிக முக்கியம்.

துணியிலே கை வண்ணம் காணும் வித்தகர்:

          ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பவர், ஒரு துணியைப் பார்த்த உடன், அந்தத் துணியை அணிபவரைப் பார்த்தஉடன், அதில் இருந்து கடைசியாக அமையவிருக்கும், அழகிய தைத்த துணியின் வடிவத்தை மனதில் கொண்டு வந்து இருத்த வேண்டும்.


          பிறகு, மனதில் உள்ள அழகிய வடிவமைக்கப்பட்ட உடைக்கு தகுந்தார் போல், துணியை வெட்டி, ஒவ்வொரு தையலாக, ஒவ்வொரு உடை பாகத்தையும் மிகவும் கவனத்துடன் உருவாக்கி, கடைசியில் ஒரு அழகான ஆடையை உருவாக்கும் ஒரு வித்திகாரிதான் தையல் கலை வித்தகர். இதற்கு அபரித பொறுமை, அளவில்லாத நிதானம் என்ற பல பண்புகள் வேண்டும். இந்தப்பண்புகள், தமிழக வளரிளம் பருவப் பெண்களிடம் இயற்கையிலேயே குடி கொண்டு உள்ளது.

டெயிலர்...பேஷன் டிசைனர்:

          இன்றைய காலகட்டத்தில், தையல் கலை என்ற கலை, ஆடை உருவாக்கும் கலை என்ற நிலையைத் தாண்டி, ஆடை வடிவமைப்பு என்ற நிலையை அடைந்து உள்ளது. இன்று நகரங்களில், பெண்கள் ஆடை உருவாக்குபவர்களை விட, ஆடையை வடிவமைப்பவர்களைத் தேடுகிறார்கள். உடலை மறைக்க ஆடை மற்றும் மனிதன் தட்ப வெட்ப சூழ்நிலையில் இருந்து காத்துக்கொள்ள உடை என்ற நிலைகளை தாண்டி, பிறர் உள்ளத்தை மயக்க ஆடை என்ற நிலை வேகமாக வளர்ந்து வருகிறது.

தையல் கலை....தையல் தொழில்:

          தையல் பயிற்சி என்பது மன ஒரு நிலைப் பாட்டுக்கு ஒரு சிறந்த பயிற்சி, ஒரு பெண்ணின் மனதில் தையலும், தையலில் மனமும் ஈடுபாடு கொள்ள வேண்டும். இதை கலை நயத்துடன் செய்யும் போது அதற்க்குப் பெயர் தான் "தையல் கலை". அந்த தையல் கலையை, தொழில் நயத்துடன், தொழில் பக்தியுடன், தொழில் சிரத்தையோடு செய்யும் போது அதற்கு பெயர் "தையல் தொழில்".


         "செய்யும் தொழிலே தெய்வம். அதில் நமது திறமைதான் செல்வம்" என்ற கோட்பாட்டோடு, முழுமையாக ஒரு பெண் இந்தத் தையல் கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இரவு பகலாக தையல் கலையில் ஈடுபடும் போது கிடைப்பதுதான் "வியாபார வெற்றி".

தையல் கலைப் பயணம்...

          வளரிளம் பருவப் பெண்ணே, முதலில் தையல் கலையைப் பற்றி விழிப்புணர்வு பெற்றூ, பிறகு, உனது பொழுது போக்கு நேரத்தை ஆரோக்கியமான வகையில், இந்த தையல்கலைக்காக செலவிடு. பிறகு, தையல் கலையில் உள்ள நெளிவு, சுழிவுகளைத் திறம்படத் தெரிந்துகொள். முதலில் உன் ஆடையை தன் கையை தனக்கு உதவி என்ற வகையில் நீயே சிறந்தது முறையில் வடிவமைக்கத் தெரிந்துக்கொள். பிறகு, உன் வீட்டில் உள்ளவர்களின் ஆடையை சிறப்பாக வடிவமைக்கத் தெரிந்துக்கொள். பிறகு, உன் தெருவில் உள்ளவர்களின் ஆடையை சிறப்பாக வடிவமைக்கத் தெரிந்துகொள். பிறகு உன் ஊரில் உள்ளவர்களின் ஆடை வடிவமைப்பு என்று உன் தையல் கலை வண்ணத்தை உலகத்திற்கே ஒளிவிடச் செய்.
உன் தையல் கலை வாழ்க்கை.....உன் கையில் !.

உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை மற்றும் விமர்சனங்கள் காத்திருக்கிறது.

மேலும், படிக்க1. நடைமுறை Html குறியீடு: kbdk மூலம் அறிக2. புவி வெப்பமடைதல் பற்றி ஒரு கட்டுரை3. kbdk கொண்டு மலைப்பாம்பு அறிய4. தஞ்சாவூர் கார் விழா5. HTML குறியை விபத்தில் கோர்ஸ்6. Kbdk கொண்டு AMP ஐ அறிய 7. நாற்றம் மாசு8. வளரும் இந்தியா 9. 10 சுகாதார கட்டளைகள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தையல் இயந்திர பாகங்கள்

தையல் கலைப் பொருட்கள்